`மனம் மாறாத ராவ்; சாவைத் தேடும் அரசு ஊழியர்கள்!’ – பதற்றத்தில் தெலங்கானா

0
22

`மனம் மாறாத ராவ்; சாவைத் தேடும் அரசு ஊழியர்கள்!’ – பதற்றத்தில் தெலங்கானா

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்துவருவதால் அந்த மாநிலத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

தெலங்கானா போராட்டம்

தெலங்கானா மாவட்டத்தில் கடந்த பத்து நாள்களுக்கு மேலாகப் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (TSRTC) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலிப் பணியிடங்களுக்குப் போதுமான ஆட்களை நியமிப்பது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்குவது, 2017 ஊதிய சீரமைப்புப் பரிந்துரைகளை அமல்படுத்துவது மற்றும் டீசல் மீதான வரியை அகற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா போராட்டம்

தெலங்கானா போராட்டம்

தசரா விடுமுறை தினத்தில் தொடங்கிய இவர்களின் திடீர் போராட்டத்தால் வெளியூர்களுக்குச் செல்லும் தெலங்கானா பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்த மாநில அரசு, அவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. “விடுமுறை நாள்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் தவறு, அனைவரும் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும், அப்படித் திரும்பாதவர்கள் வேலையிழந்ததாக அறிவிக்கப்படுவார்கள்” என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அரசின் எச்சரிக்கையை ஏற்காத ஊழியர்கள், தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனால், அரசு அறிவித்தது போல எச்சரிக்கைக்குப் பின்னரும் வேலைக்குத் திரும்பாத ஊழியர்கள் வேலை இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 50,000 ஊழியர்களில் 200 பேர் மட்டுமே வேலைக்குத் திரும்பியுள்ளனர். மீதமுள்ள அனைவரும் வேலையிழந்துள்ளனர். தற்காலிக ஊழியர்கள், தனியார் பேருந்துகள் ஆகியவற்றின் உதவியுடன் 50% போக்குவரத்தைச் சீர் செய்துள்ளது அம்மாநில அரசு. தெலங்கானா போக்குவரத்துத் துறைக்கு விரைவில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீனிவாஸ் ரெட்டி

ஸ்ரீனிவாஸ் ரெட்டி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஊழியர்கள் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். இருந்தும் தற்காலிக ஊழியர்களால் இயக்கப்படும் பேருந்தை வழிமறித்து, அவர் மீது தாக்குதல், பஸ் கண்ணாடிகள் உடைப்பு போன்ற செயல்களில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் ரெட்டி என்ற போக்குவரத்து ஊழியர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவச் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். “40 வருடங்களாக இந்தத் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நலம் பெறவேண்டும்” என இறுதியாக ஒரு வீடியோவில் பேசியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.

‘அனைத்து ஊழியர்களும் நல்லா இருக்கணும்’- தற்கொலைக்கு முயன்ற தெலங்கானா போக்குவரத்து ஊழியர்!

இவரையடுத்து நேற்று, வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட் பகுதியில் உள்ள பணிமனையில் பதினி ரவி என்ற ஊழியர், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், காவலர்கள் ஆகியோர் இணைந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். வேலை இழப்பு, அரசின் நடவடிக்கை, மன அழுத்தம் ஆகிய காரணங்களால் தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலைக்கு முயல்வது தொடர்கதையாகி வருகிறது. ஆனாலும் தன் வேலை நீக்க முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

சந்திரசேகர ராவ்

இந்த நிலையில், நேற்று தெலங்கானா அரசிதழ் பதிவுத் தலைவர் ரவீந்தர் ரெட்டி மற்றும் செயலர் மம்தா ஆகிய இருவரும் முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “வேலை நிறுத்தம் தொடர்பாகத் தொழிற்சங்கங்கள் எந்த முறையான முன்னறிவிப்பும் தெரிவிக்கவில்லை. யூனியன் தலைவர்களும், ஊழியர்களும் அரசியல் கட்சிகளின் வலையில் சிக்கியுள்ளனர். யூனியன் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் பல மணிநேரங்களாகக் காத்திருந்தோம். ஆனால், அவர்கள் வரவில்லை. நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்து ஊழியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பேருந்துகள் இயங்காததால், தனியார் பேருந்துகளும், பிற வாகன ஓட்டுநர்களும் சரமாரியாகப் பயணக் கட்டணத்தை அதிகரித்துள்ளனர். தனியார் கல்லூரிப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள், மினி வேன்கள் போன்ற அனைத்து வாகனங்களும் போக்குவரத்துக்காக களத்தில் இறக்கப்பட்டுள்ளன. அம்மாநில மெட்ரோ ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. அலுவலகம் செல்வோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நாளை தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தெலங்கானா மெட்ரோ

தெலங்கானா மெட்ரோ

முன்னதாக தெலங்கானாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அக்டோபர் 13-ம் தேதிவரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது அக்டோபர் 19 -ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மாணவர்களுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மொத்த தெலங்கானா மாநிலமும் ஸ்தம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here